முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களிடம் தென்றல் பத்திரிக்கை நடத்திய உரையாடல் இது.
வரலாற்று ஆர்வலர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டியது.
நேர்காணல்: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
ஒலிவடிவில் கேட்க - http://www.tamilonline.com/…/Jun2016_Nerkanal_KudavoilBalas…
சோழமண்டலத்தில் இவர் ஆராயாத கோயில்களே இல்லை என்னுமளவிற்குப் பல ஆலயங்களைத் தேடிச்சென்று கள ஆய்வு செய்தவர் குடவாயில் பாலசுப்பிரமணியன். வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், கல்வெட்டு அறிஞர், கோயிற்கலை நிபுணர் எனப் பல திறக்குகளில் இயங்குகிறவர். இவரது ஆய்வு முடிவுகள் மிக முக்கியமானவை. இவர் எழுதிய 'குடவாயிற்கோட்டம்', 'கருணாகரத் தொண்டைமான்', 'நந்திபுரம்', 'கோனேரி ராயன்', 'கோயிற்கலை மரபு', 'தமிழக கோபுரக்கலை மரபு', 'தஞ்சாவூர்', 'தஞ்சை நாயக்கர் வரலாறு', 'இராஜராஜேச்சரம்', 'தாராசுரம்' போன்ற நூல்கள் வரலாற்றாய்வில் பல புதிய கதவுகளைத் திறந்தவை. அகில இந்திய அளவில் பல கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார். கோலாலம்பூர் மற்றும் தஞ்சையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடுகளிலும், கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார். கம்போடியா, ஜாவா, பாலி பகுதிகளில் கள ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளார். ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது, சேக்கிழார் விருது, திருக்கோயில் கலைச்செல்வர் விருது, இராஜராஜ சோழன் விருது, உ.வே.சா. விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சாஸ்த்ரா பல்கலையின் முதுமுனைவர் விருது உட்படப் பல்வேறு கௌரவங்களைப் பெற்றவர். தமிழகம் தேர்தல் பரபரப்பில் இருந்த வேளையில், தஞ்சையில் அவரது இல்லத்தில் ஒரு முற்பகல் நேரத்தில் சந்தித்து உரையாடினோம். அதிலிருந்து...
*****
கே: வரலாற்றாய்வில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
ப: குடவாயில் கோட்டம் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் தற்போதைய குடவாசலுக்கு அருகே உள்ள பெருமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தேன். அருகிலிருந்த கோட்டவம் என்ற பகுதி மிகப்பெரிய கருவைக்காடு. அங்கே சங்ககாலத்தில் நிதிசேமிப்புக் கிடங்கு இருந்திருக்கிறது. அங்கே மழைபெய்து மண் அரித்து ஓடும்போது கரைகளில் நிறைய நாணயங்கள் கிடைக்கும். தங்கம், வெள்ளி, செப்பு என்று பலவாறாக இருக்கும். சிறுவயதில் சில காசுகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றில் 'உரக' என்று பொறிக்கப்பட்ட தங்கக்காசும் ஒன்று. அது ஈழத்து வெற்றி நினைவாக ராஜராஜன் வெளியிட்ட காசு. அது தவிரச் சங்ககாலச் சோழர்காசு ஒன்றும் கிடைத்தது. சுந்தரபாண்டியன் காலத்துக் காசு ஒன்றும் கிடைத்தது. இந்தக் காசுகள் வரலாற்றின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. பள்ளி நூலகத்திலும், குடவாசல் பொதுநூலகத்திலும் படிக்கக் கிடைத்த வரலாற்றாய்வு நூல்களும் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்றபோது பார்த்த கல்வெட்டுக்களும் என்னுள் அலைகளை ஏற்படுத்தின. அவற்றைப் படித்தறிய ஆர்வம் ஏற்பட்டது. கலைக்களஞ்சியத்தில் ஒவ்வொரு எழுத்தும் எப்படி வரிவடிவம் பெற்றது என்பதைப் படத்துடன் பார்த்தேன். அதனை ஒரு நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டு கல்வெட்டு எழுத்துக்களை ஒப்பிட்டு, படித்துப் பார்ப்பேன். அக்காலகட்டத்தில் தினமணிசுடர் இதழில் நிறைய வரலாற்றாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. அவை எனக்கு இத்துறைமீது ஆர்வத்தைத் தூண்டின. தமிழ்நாடு தொல்பொருள் துறையின் இயக்குநராக இருந்த டாக்டர். நாகசாமி, கோடை விடுமுறைகளில் கல்வெட்டுக்களைப் படிக்க பயிற்சி நடத்துவார். நான் அதில் கலந்துகொண்டேன். அவரையே எனது ஆசானாகவும் வரித்துக்கொண்டேன். பின்னர் கல்லூரிக் காலத்தில் ஆலயங்களுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படியெடுப்பேன். சென்னைக்குச் செல்லும்போது நாகசாமி அவர்களிடம் அதைக் காட்டி விளக்கத்தை அறிய முயல்வேன். இப்படித்தான் ஆரம்பித்தது.
கே: உங்கள் முதல் ஆய்வு எது?
ப: 1970ல் நான் கும்பகோணம் கல்லூரியில் விலங்கியல் படித்தேன். ஆனாலும் ஆர்வம் முழுவதும் தொல்லியலில்தான். காரணம், குடந்தையைச் சுற்றியுள்ள ஆலயங்கள். எனது ஓய்வுநேரத்தை அங்கேதான் செலவழிப்பேன். அப்போது அடிக்கடி தாராசுரம் கோயிலுக்குப் போவேன். அற்புதமான கோயில் அது. 63 நாயன்மார்களின் வரலாறும் அங்கே சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தைச் சுற்றிப் புதர் மண்டிக் கிராமத்து மக்களால் கழிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது எனக்கு வருத்தத்தைத் தந்தது. தினமணிசுடரில் அதுபற்றி 'கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். அதுதான் எனது எழுத்துலகப் பிரவேசம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை தொடர்ந்து தினமணியிலும் மற்றும் பல இதழ்களிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறேன். டாக்டர் நாகசாமியைப் போலவே சேக்கிழார் அடிப்பொடி தி.நா. ராமச்சந்திரன் அவர்களும் எனது ஆசான்களுள் ஒருவர். எண்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர் சேகரித்து வைத்திருக்கிறார். சைவம், சமயம், தமிழ் என எல்லாவற்றிலும் மேம்பட்ட விற்பன்னர். தினந்தோறும் அவரைச் சந்தித்து இரண்டு மணி நேரமாவது உரையாடுவேன். சமயம், தமிழ், இலக்கியம் பற்றி நிறைய செய்திகளை அவரிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். அவருடைய மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்.
கே: சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து…
ப: தொடக்கத்தில் சரஸ்வதி மகால் நூலகத்தின் ஆவணப் பிரிவில் நுண்படத்துறை வல்லுநராகவும் காப்பாட்சியராகவும், பின்னர் வெளியீட்டு மேலாளராகவும் பணிபுரிந்தேன். அங்கு நிறைய பழைய ஓலைச்சுவடிகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடன் தெலுங்குப் பண்டிதர் விஸ்வநாதன், மராத்தி பண்டிதர் பீமராவ், சம்ஸ்கிருத பண்டிதர்கள் எனப் பல விற்பன்னர்கள் பணியாற்றினர். சுவடியியல் வல்லுநர்களான அவர்களிடமிருந்து கிடைத்த செய்திகள் எனது ஆய்வுகளுக்கு, தேடல்களுக்குத் துணைநின்றன. கள ஆய்வில் நான் பெற்ற தகவல்களையும் அவர்கள் கூறிய இலக்கிய, வரலாற்றுச் செய்திகளையும் ஒப்புநோக்கி பல அரிய உண்மைகளை அறிந்துகொள்ள முடிந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி நூல்களிலிருந்தும் பல செய்திகளை அறிந்துகொண்டேன். பல நூல்களை எழுத அது காரணமானது. அந்த அனுபவங்கள் என் வாழ்வின் பொக்கிஷம்.
நேர்காணல்: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் (Part-2)

கே: உங்களது கண்டுபிடிப்புகள் பற்றி…
ப: எனது ஆய்வுகளுள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று 'நந்திபுரம் ஆயிரத்தளி' பற்றியது. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காஞ்சிபுரம் தனக்குப் பாதுகாப்பில்லை என்று கருதிய காரணத்தால், சோழநாட்டில் ஒரு பாதுகாப்புமிக்க தலைநகரை உருவாக்கினான். அதுதான் நந்திபுரத்து ஆயிரத்தளி என்பது. ஆயிரத்தளி என்றால் ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட பெருங்கோயில். நந்திபுரம் அதன் தலைநகர். பல்லவர், சோழர்களைப் பற்றி ஆராய்ந்த வல்லுநர்கள் எல்லாருமே இந்த நந்திபுரம் பழையாறையை அடுத்துள்ள நாதன்கோயில் என்பதாகத்தான் பதிவு செய்துள்ளனர். பழையாறையில் சோழ அரண்மனைகள் பல இருந்துள்ளன. பல்லவர்களின் அரண்மனையும் அங்கே இருந்திருக்கிறது. அதை வைத்து அவர்கள் அப்படி முடிவுகட்டினர்.
நானும் பல ஆண்டுகள் இதுபற்றி ஆராய்ந்தேன்; கல்வெட்டுச் சான்றுகளைப் பரிசீலித்தேன். Indian National Trust for Art and Culture (INTAC) ஒருமுறை கண்டியூர் கோயிலைப்பற்றி எழுதுவதற்கான ஆய்வுத் திட்டத்தை எனக்கு அளித்தது. நான் கண்டியூரில் கள ஆய்வு செய்தேன். அப்போது தஞ்சையருகில் வீரசிங்கம் பேட்டையில் ஒரு தோட்டத்தில் நிறையச் சிவலிங்கங்கள் உள்ளதாகவும், எங்கு தோண்டினாலும் சிவலிங்கமாக வருவதாகவும் செய்தி கிடைத்தது. உடனே நான் அங்கு சென்று ஆராய்ந்தேன். அதுதான் நந்திபுரத்து ஆயிரத்தளியாக இருந்திருக்க வேண்டும் என்று யூகித்தேன். அதற்கான தேடல்களைத் தொடர்ந்தேன். அரண்மனை, கோயில் இருந்த இடம், ஏன் அந்தக் கோயில் அழிந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்தேன். மாலிக்காபூர் படையெடுப்பில் அழிந்த கோயில்களுள் அதுவும் ஒன்று. அதற்கான ஆதாரத் தரவுகளைச் சேகரித்தேன். எழுநூறுக்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. ஆனால், மேலும் வலுவான சான்று தேவைப்பட்டது. அப்போதுதான் சுந்தர பாண்டியன் கல்வெட்டு ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கிடைத்தது. அதில் ஆதாரம் இருந்தது.
கே: ஓ.. சுவாரஸ்யம். அந்தக் கல்வெட்டில் என்ன இருந்தது?
ப: மாறவர்மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டைக் கைப்பற்றி அதன் பழைய தலைநகரங்களான உறையூர், தஞ்சாவூர், பழையாறை போன்ற நகரங்களை அழித்துவிட்டுவிஜயாபிஷேகம் செய்துகொண்டது நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனை என்று தனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிட்டிருக்கிறான். வெற்றிக் கொண்டாட்டமாகச் சில ஊர்களையும் ஆலயங்களுக்கு நிவந்தமாக அளித்திருக்கிறான். அதனைப் பற்றி கல்வெட்டில் "சோழமண்டலத்து நித்த வினோத வளநாட்டு, கிழார் கூற்றத்து நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனையில் அமர்ந்து" செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறான். இது ஒரு முக்கியமான ஆதாரம்.
சோழநாட்டில் மூன்று நந்திபுரங்கள் இருந்திருக்கின்றன. ஒன்று வேதாரண்யம் பக்கத்தில்; மற்றொன்று பழையாறை அருகில்; மற்றொன்று இந்த நந்திபுரம். பழையாறை நந்திபுரம் திருநரையூர் கூற்றத்தில் இருந்திருக்கிறது. வேதாரண்யம் நந்திபுரம் ஆவூர் கூற்றத்தில் இருந்திருக்கிறது. கிழார்கூற்றத்தில் அமைந்த ஒரே நந்திபுரம், தஞ்சைக்கருகே கண்டியூர் பகுதியில் அமைந்திருக்கும் இதுதான் என்பது உறுதியானது. அதை மெய்ப்பித்து 'நந்திபுரம்' என்ற நூலை எழுதினேன். INTAC அந்நூலை வெளியிட்டது.
கே: நாயக்கர் வரலாறு பற்றியும் நீங்கள் ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். நாயக்கர்களின் வரலாறு முன்னமே எழுதப்பட்டிருந்தாலும் சரியான ஆவணத்தரவுகளின்படி இல்லை. அமரர் விருத்தகிரீசன் அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் ஆங்கிலத்தில் நாயக்கர் வரலாற்றை எழுதியிருந்தார். அவரும் அந்த நூலில் "சமகாலச் சான்றுகள் கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் 25-30 ஆண்டுகளாகத் தேடி, ஆராய்ந்து ஆவணங்களைத் திரட்டினேன். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டும், சரஸ்வதி மகால் சுவடிகளைக் கொண்டும், தெலுங்கு, சம்ஸ்கிருத, மராட்டிய நூல்கள், வல்லுநர்களின் உதவியைக் கொண்டும் முறையாகத் தொகுத்து நூலாக்கினேன். அதுதான் 'தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு'. அது திருத்தமான, தெளிவான, அதிகாரபூர்வமான வரலாற்று ஆவணமாகும். எனக்குப் புகழ்சேர்த்த நூல்களுள் அதுவும் ஒன்று.
நேர்காணல்: முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் (Part-3)
கே: பழங்காலக் கோயில்கள் பல இன்னமும் காணப்படுகின்றன. ஆனால் மன்னர்களின் அரண்மனைகள் அதிகம் காணக் கிடைப்பதில்லை. இதற்கு என்ன காரணம்?
ப: தஞ்சையில், உறையூரில் அரண்மனைகள் இருந்துள்ளன. பூம்புகாரில் கடல் கொண்டுவிட்டது. கங்கைகொண்ட சோழபுரத்தில் சிறப்பானதொரு அரண்மனை இருந்திருக்கிறது. பழையாறையில் சோழர் வாழ்ந்த 'சோழன்மாளிகை' என்ற இல்லம் இருந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் அழிந்து போய்விட்டன. காரணம், தமிழ் மன்னர்களிடையே நிலவிய பகை. இது சங்ககாலம் முதலே தொடர்ந்திருக்கிறது. சேர, சோழ, பாண்டியர் மூவருமே பலமான மன்னர்களாக அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள். சங்கம் மருவிய காலத்திற்குப் பிறகு, பிற்காலச் சோழர்கள் ஆட்சியமைந்தபோது பாண்டியர்கள் வலிமை குன்றினார்கள். சோழர்களின் கை ஓங்கியது. ஏறத்தாழ 430 ஆண்டுகள் சோழர்கள், பாண்டியர்களைத் தமது ஆதிக்கத்தின்கீழ் அரசர்களாக வைத்திருந்தார்கள். அதற்குச் சோழ பாண்டி மண்டலம் என்றே பெயர் இருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலைமை மாறியது. பாண்டியர்கள் சோழ ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். இதனால் வெகுண்ட குலோத்துங்கன், பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியனைத் தோற்கடித்து, அவர்களது அரண்மனையைத் தரைமட்டமாக்கினான். கழுதையைக் கொண்டு, உழுது வரகு தெளித்தான். அரண்மனையிலிருந்து கைப்பற்றிய பெருஞ்செல்வத்தை ஆலவாய் அண்ணல் கோயிலுக்கு எடுத்துச் சென்று, அவர் காலடியில் சமர்ப்பித்து, அவருக்குப் பெருவிழா எடுத்து வீதியில் நின்று இறைவனைச் சேவித்ததாக அவனது மெய்க்கீர்த்தி சொல்கிறது. பின்பு சோழநாடு திரும்பும் வழியில் இருந்த பொன்னமராவதி, குடுமியான்மலை போன்ற ஊர்களில் ஆலயங்களுக்குக் கொடை கொடுக்கிறான். சோழநாட்டுக்கு வந்தபின்பு பாண்டி நாட்டிலிருந்து கொண்டுவந்த நிதியைக்கொண்டு ஆலயங்களுக்குச் சிறப்புச் செய்கிறான். பகை மன்னர்களிடமிருந்து கைப்பற்றிய செல்வத்தை கோயில்களுக்குத்தான் அளித்திருக்கிறான் என்பது அவன் வரலாற்றிலிருந்து தெரியவருகிறது.
சோழர்களுடைய வலிமை மூன்றாம் ராஜராஜன், மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் குறையும்போது மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டின்மீது படையெடுத்து வந்து அதன் தலைநகர்களை அழித்தான். இதுபற்றி அவன் மெய்க்கீர்த்தியில் "தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி" என்று சொல்கிறான். தஞ்சை, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனைகளை இடித்தான். கழுதைகட்டி உழுது வரகு தெளித்தான். பின்னர் சோழநாட்டின் நந்திபுரத்து ஆயிரத்தளி அரண்மனையில் விஜயாபிஷேகம் செய்து கொண்டான். அவனும் சோழநாட்டில் கவர்ந்த செல்வங்களைக் கொண்டு சோழ, பாண்டிய நாட்டு ஆலயங்களுக்கு நிவந்தங்கள் அளித்தானே தவிர, சோழநாட்டுக் கோயில்களை அழிக்க முற்படவில்லை. தில்லை கோயிலுக்கு பெருஞ்செல்வத்தை அளித்தான். குலோத்துங்க சோழன் முன்னர் அளித்திருந்த கோயில் அறக்கொடைகளைத் தொடரச் செய்தான். அதற்காக புதிய அறக்கொடைகளையும், தன் பெயரில் நிவந்தங்களையும் அளித்தான். மன்னர்களின் பகையால் அரண்மனைகள் அழிந்தன. ஆனால் ஆலயங்கள் நிலைத்து நின்றன. திருவெள்ளறையில் உள்ள வைணவ ஆலயத்தில் தன் வெற்றிகுறித்த கல்வெட்டு ஒன்றையும் சுந்தர பாண்டியன் பொறித்திருக்கிறான். அதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது.
கே: ஓ... சொல்லுங்களேன்?
ப: கரிகாற் பெருவளத்தானைப் புகழ்ந்து கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலை பாடினார். அதுகண்டு மகிழ்ந்த அவன், புலவருக்கு பதினாறாயிரம் பொன்னும் பதினாறுகால் மண்டபம் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தான். சோழநாட்டின்மீது படையெடுத்து வந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆலயங்கள் தவிர்த்து அனைத்து அரண்மனைகளையும், மண்டபங்களையும், அரசியல் கேந்திரங்களையும் அழித்தான். அவன் பறிக்காத தூணில்லை. அழிக்காத மண்டபமில்லை. ஆனால் கரிகாலன் புலவனுக்குக் கொடுத்த அந்தப் பதினாறுகால் மண்டபத்தை மட்டும் அழிக்காமல் விட்டுவிட்டான். பகைவனான சோழனைப் புகழ்ந்து பாடியதற்கான பரிசில் என்றாலும், ஒரு தமிழ்ப் புலவன் பெற்றதென்பதால் அதை அழிப்பது தகாது என்றெண்ணி அதைமட்டும் விட்டுவிட்டான். அதுபற்றி அந்தக் கல்வெட்டில், "பறியாத தூணில்லை; கண்ணன்செய் பட்டினப்பாலை கண்டு நெறியான் விடும் தூண் பதினாறும் அங்கு நின்றனவே" என்று சொல்லியிருக்கிறான். மன்னர்கள் தங்களுக்குள் பகைவர்களாக இருந்தார்களே தவிர, அந்தப் பகைமை மக்களோ ஆலயங்களோ அழிவதற்குக் காரணமாக இருக்கவில்லை. அவர்களுக்கு தர்மம் பகையல்ல. இதுதான் நம் தமிழ் மன்னர்களின் தனிப்பட்ட சிறப்பு என்றும் சொல்லலாம்.
மிக்க நன்றி -Thendral
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment