Wednesday, 6 December 2017

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோட்டைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கோட்டைகள்

தமிழ் நாட்டில் அதிகமான கோட்டைகளை உள்ளடக்கியது கிருஷ்ணகிரி மாவட்டமாகும்.இம்மாவட்டத்திற்கு பல சிறப்புகள் இருந்தாளும் கோட்டைகள் நிறைந்த மாவட்டமென்பதிலேயே பெருமைகள் அதிகம்.மாவட்டத்தின் தலைநகரமான கிருஷ்ணகிரிக்கு அழகு சேர்ப்பது மிகவும் கம்பீரமாக தெரியும் கிருஷ்ணகிரி மலைக்கோட்டைதான். இம்மாவட்டத்தில் மூன்று தரைக்கோட்டைகளும், இருபதுக்கும் மேற்பட்ட மலைக்கோட்டைகளும் உள்ளன.
கிருஷ்ணகிரி மலை கோட்டை (சையத்பாட்ஷா மலை)
சோழர்கள், ஒய்சாளர்கள் வீழ்ச்சியுற்றப்பிறகு விஜயநகர பேரரசு வந்தது. விஜயநகர
பேரரசு வீழ்ச்சியடையும் காலம் வந்ததும் பேரரசின் குறுநில மன்னர்களில் ஓருவனாக இருந்த ஜெகதேவராயன். என்பவன் பெனுகொண்டாவைப் போர்தொடுத்து பிஜப்பூர் சுல்தானை தோற்கடித்து விரட்டினான்.இவனது போர்த் திறமையை பாராட்டிய பேரரசர் ஸ்ரீரங்கராயர் ஜெகதேவராயனக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்து மருமகனாக்கி கொண்டார். ஜெகதேவராயன் ஜெகதேவி என்ற ஊரில் குடிபெயர்ந்து அங்கிருந்து கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் வரை உள்ள மலைகளை ஓன்றினைத்து பாரமகால் என்றபெயரில் வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. பாரமகால் என்பது பன்னிரண்டு கோட்டைகளைக் குறிப்பதாகும். இந்த பன்னிரண்டு கோட்டைகளின் தலைமையிடமாகத் ஜெகதேவி கோட்டை இருந்தது. இக்கோட்டைகளின் முதல் சிற்றரசனாக நியமிக்கப்பட்டவர் ஜெகதேவராயன்.
ஜெகதேவராயன் 16 ஆம் நூற்றாண்டில் இறந்தப்பிறகு இக்கோட்டைகள் பாளையக்காரர்களார்களின் வசமானது. அதன் பிறகு மைசூர் மன்னர் சிக்க தேவராயர் கி.பி 1688 ஆம் ஆண்டு கைப்பற்றினார். அப்போது இதற்கு பெயர் தகடூர் நாடு. இந்த தகடூர் நாடு கி.பி.1768 வரை மைசூர் உடையார் வசம் இருந்துள்ளது. கி.பி 1761 ஆம் ஆண்டு எல்லா கோட்டைகளையும் ஐதர் அலி கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஐதர் அலியின் ஆட்சி காலம் கி.பி 1782 வரை நீடித்தது. அதன் பிறகு அவனது மகன் திப்பு சுல்தான் ஆட்சி கி.பி 1782-1799 வரை ஆட்சி புரிந்தான்.இவன் காலத்தில் ஆங்கிலேயருக்கும் திப்புவிற்கும் அடிக்கடி போர்கள் நடைப்பெற்றன. கி.பி.1792  க்கு பிறகு திப்பு வசமிருந்த பாரமகால் கிழக்கிந்திய கம்பினியின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி-1782 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் ஐதர் இறந்தார். கி.பி.1799 ஆம் வருடத்தில் மே மாதம் நான்காம் தேதி ஒர் போர் வீரனால் சுடப்பட்டு இறந்து போனார். திப்புவின் சமாதி கர்நாடாகவில் ஸ்ரீரங்கபட்டனத்தில் இருக்கிறது. முதலில் கிருஷ்ணதேவராயர் கோட்டை. பின்பு ஜெகதேவராயன் கோட்டை. பிறகு திப்புசுல்தான் கோட்டை ,ஷையத்பாஷா மலை. இப்போது கிருஷ்ணகிரி மலை கோட்டை.இக்கோட்டையின் மேல் உள்ள இடங்கள், போர்வீரர்கள் தங்கும் இடம், ஆயுத கிடங்கு, ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனி சிறைசாலை, நீதி வழங்கும் இடம், குடிநீருக்காக தனித்தனி குளங்கள், சுரங்க பாதை ஆகும். 16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட
பாரமகால் என்று குறிப்பிடும் பன்னிரண்டு கோட்டைகளின் பெயர்கள்.
இந்த பெயர்கள் அனைத்தும் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டதாகும்.



1.கிருஷ்ணகிரி , 2.ஜெகதேவிதுர்க்கம், 3.வீரபத்ரதுர்க்கம், 4.கவல்கரா(kavalgarh), 5.மகாராஜக்கடை, 6.பஜங்ககாரா, 7.கடோர்கர், 8.திருப்பத்தூர், 9.வாணியம்பாடி, 10.கனகநகரா, 11.சுதர்சநகரா, 12.தட்டக்கல். மேற்கண்ட கோட்டையில் இப்போது ஆறு கோட்டைகள் இல்லை. திப்பு சுல்தான் காலத்தில் உருவாக்கப்பட்ட  மேலும் சில கோட்டைகள். இராயகோட்டை, ஒசூர் கோட்டை, தேன்கனி கோட்டை, தளி கோட்டை, மத்தூர்கோட்டை, காவேரிப்பட்டிணம் தரகோட்டை,ஊடேதுர்கம் கோட்டை,இரத்தினகிரிகோட்டை,மேலும் பல பதிவு செய்யப்படாத கோட்டைகள் ஏராளமாக உள்ளன.
இராயகோட்டை மலைக் கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய  கோட்டையாகும். .பல்லவர்கள்,கங்கர்கள், நுளம்பர்கள், சோழர்கள், ஒய்சாளர்கள், விஜயநகரபேரரசு, ஜெயதேவராயர்கள்,மைசூர் உடையார்கள்,திப்புசுல்தான்,ஆங்கிலேய அரசு என்று மிக நீண்ட வரலாற்று பயணத்தை உள்ளடக்கியது இராயகோட்டையாகும் ஓசூர்-பாலக்கோடு போகும் சாலையின் இடையில் வருகிறது இவ்வூர். ஜெயதேவராயர்கள்தான் இங்கு கோட்டையை உருவாக்கி இருக்கவேண்டும்மென கருதப்படுகிறது.ராயர் ஆட்சி செய்யப்பட்டதால் முதலில் இராயர்கோட்டை என்றும் பின்காலத்தில் இராயக்கோட்டையாக மாறியிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. மற்ற கோட்டைகளை காட்டிலும் இக்கோட்டைக்கு தனிசிறப்பு உண்டு.தரைக்கோட்டை,மலைக்கோட்டை என இரண்டு வகையான கோட்டைகளை உள்ளடக்கியது இவ்வூர்.இக்கோட்டை கடல்மட்டத்திலிருந்து சுமார் 1500 அடி வரை இருக்கும்.தென்னகத்தின் மிக முக்கியமான முதல் மூன்று மைசூர் போர்களில் இக்கோட்டைமுக்கியஇடமாக இருந்திருக்கிறது. திப்புசுல்தானுக்கும் ஆங்கிலேயஅரசுக்கும் பல்வேறு போர்கள் நடைப்பெற்று இருக்கின்றன.
இராயக்கோட்டையின் வடக்கு புரத்தில் புதிய பேட்டை என்ற இடத்தின் அருகே சிறிய அளவிலான தரக்கோட்டை உள்ளது.இத்தரக்கோட்டையில் அரசரின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கிபணிபுரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இப்போது இவ்விடம் பயண்படுத்தமுடியாத அளவு சிதைந்தபோயுள்ளது.நகரத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் இம்மலையின் மேலே செல்வதற்காண பாதை தொடங்குகிறது.சிரிது தூரம் சென்றதும் சமதளமான பாதை நகருகிறது.அதன் தொடர்ச்சியாக கோட்டை மதிற்சுவர்கள் தொடங்குகின்றன.மேலே செல்லும் பாதை பலஇடங்களில் பாறையைகுடைந்து செய்யப்பட்டுள்ளன.இப்படி பாறையை குடைந்து செல்லும் பாதை சிவதூர்வாசர் முனிவர் தங்கி வழிப்பாடு செய்து வந்ததாக இன்றுவரை நம்பபடுகிது.
இக்கோட்டையின் மலைமீது தென்மேற்காகவும் தென்வடக்காவும் கட்டப்பட்டுள்ள கோட்டை சுவர்கள் இன்னும் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.சில இடங்களில் மட்டும் சிதைக்கப்பட்டுள்ளன.இங்கு காணப்படும் கோட்டையின் ஒரு பகுதியை சலாபத்கான் பீரங்கிமேடை என்று அழைக்கப்பட்டுவருகிறது.இவர் திப்புசுல்தானின் நன்மதிப்பை பெற்ற கில்லோதார்களில் ஒருவர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோட்டை பாதுகாக்கப்பட்டு வருகிறது.மலைக்கு மேலே பார்க்கும் போது பல்வேறு தடயங்களை காணமுடிகிறது.குதிரை வண்டி பயணப்பட்டதற்காண வண்டி தடம்,தாணிய கிடங்குகள்,படைவீரர்களின் பதுங்குகுழிகள் ,பாறையோடு சேர்த்து கட்டிய படைவீரர்கள் தங்குமிடம்,வெடிமருந்துகளை பாதுகாத்து வைப்பதற்காண கிடங்குகள்,படைவீரர்கள் பயண்படுத்து வகையில் மழை நீரை சேமிக்கும் இடங்கள்,இயற்கையாகவே இருக்கும் நீர்சுனைகள்,பீரங்கியை இயக்குவதற்காக தணிமேடைகள்,தண்டனைகொடுப்பதற்காண இடங்கள்,இபபடி பலஇடங்கள் காணப்படுகின்றன.
இம்மலைக்கோட்டையில் அரசகுடம்பங்கள் தங்கி இருந்ததாகவும் கருதப்படுகிறது.மேலும் கங்கப் பல்லவரான மாவலிவாணாதிராயனது நான்காவது ஆட்சியாண்டு கன்னடகல்வெட்டு ஒன்று இருப்பதை பார்க்கமுடிகிறது.மலையின் கீழ் இருக்கும் இலட்சுமி நாராயாணா கோயிலில் ஓய்சாள அரசன் வீர இராமநாதனின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட தமிழ் கல்வெட்டு ஒன்றும் இருக்கிறது.மேலும் விஜயநகர பேரரசின் கல்வெட்டு மூலம் ஒறு தகவல் அறியமுடிகிறது.பாராமகால் சென்னப்பட்டிணம் ஜாகீர் உடன் ஜெகதேவராயர் காலத்தில் இணைக்கப்பட்டு மூன்று தலைமுறைகளாக இப்பகுதியை தலைநகரமாக இருந்து ஆட்சி புரிந்துள்ளதை காணமுடிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகவும் தொன்மையான வரலாற்று தடயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இராயக்கோட்டை மலை. இம்மலைக்கோட்டையிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட திப்புசுல்தான் பயண்படுத்திய பீரங்கி ஒன்று இப்போது இராயக்கோட்டை காவல் நிலையத்தின் முன்புரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஜெகதேவராயன் காலத்தில் உருவாக்கப்பட்டு ,அதனை தொடர்ந்து மைசூர் அரசர்களின் வசம்சென்று  பின்பு ஹைதர்,திப்புசுல்தான் அரசுகள் பெரிய பாதுகாப்பு அரண்களாக நீண்டகாலம் வைத்திருந்து அவர்களிடமிருந்து ஆங்கிலேய மேஜர் கெளடீ கி.பி.1791 ஆம் ஆண்டு கைப்பற்றி நீண்டகாலம் பயண்பாட்டி வைத்திருந்தார்கள்.இப்போது தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் போதிய அளவு பாதுகாக்கப்படவில்லை.
இரத்தினகிரி கோட்டை
ஜெகதேவராயன் ஆட்சி காலத்தில் உருவாக்கபட்டதுதான் இரத்தினகிரி கோட்டை.இதனை சுற்றி ஏழுகோட்டைகள் அரன் போல் நிற்கின்றன. இரத்தினகிரி கோட்டையின் மலை உச்சியிலிருந்து பார்க்கும் போது அஞ்செட்டி துர்கம், தேன்துர்கம், நீலகிரிகோட்டை, ஊடேதுர்கம்,தேன்கனிகோட்டை,இராயக்கோட்டை,ஓசூர்கோட்டை, போன்றவற்றை காணமுடியும்.இதற்காண கண்காணிப்பு கோபுரம் ஒன்றும் இங்கே இருந்திருக்கிறது.இப்போது இவை எல்லாம் சிதைக்கப்பட்டு இக்கோட்டை அழிவின் விளிம்பில் நிற்கிறது. இவனுக்கு பிறகு கி.பி.1652 ல் தேன்கனிக் கோட்டையை ஆட்சி செய்த இட்டிபால் ராவ் என்பவரிடமிருந்து மைசூரை ஆண்ட கந்திரவ நாகராஜா பெற்றார். அதன் பிறகு மைசூர் மன்னர் சிக்க தேவராயர் என்பவர் கி.பி.1688 ஆம் ஆண்டு தகடூரைக் கைப்பற்றினார்.அது முதல் கி.பி. 1768 ஆம் ஆண்டு வரை  இக்கோட்டையும் சேர்ந்து மைசூர் உடையார் வசம் இருந்து. இதன் பிறகு தகடூர் நாடுமுழுவதும் ஐதர் அலி(1761-82) ஆட்சியின் கீழ்வந்தது.அதற்குபிறகு அவனது மகன் திப்பு சுல்தான்(கி.பி 1782-99) ஆட்சியின் கீழ் இரத்தினகிரி கோட்டை இருந்துள்ளது.ஆங்கிலேயருக்கும் திப்பு சுல்தானுக்கும் நடந்த போரில் கி.பி.1791 ஆம் ஆண்டு சூலை மாதம் இரத்தினகிரி கோட்டைஆங்கிலேய ஆட்சிக்கு மாறியிருக்கிறது. சனத்குமார் நதியின் தெற்குப் பகுதியில் பேவுநத்தம் என்ற கிராமத்தின் அருகில் இக்கோட்டை அமைந்துள்ளது. ஜெகதேவராயன் கட்டிய கோட்டைகளும், திப்பு சுல்தான் காலத்தில் கட்டிய கோட்டைகளும், மதிற்சுவர்களும்,இடிந்த நிலையில் உள்ளன.
தென்கரைகோட்டை
தருமபுரி மாவட்டம் ,அரூர் வட்டத்தில் இராமியாம்பட்டிக்கு அருகில் இருக்கும் தென்கரைகோட்டையில், 17 ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் கட்டிய தரைக்கோட்டையும் கல்யாணராமர் கோயிலும் போதிய பாதுகாப்பின்றி ,அகழியும் ,கோட்டையும், கோயிலும் அழியும் நிலையில் உள்ளன. தருபுரி,மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கி மொத்தம் மூன்று பெரிய தரைக்கோட்டைகள் இருந்துள்ளன.அவைகள் அதியமான்கோட்டை, தென்கரைகோட்டை, தேன்கனிகோட்டையாகும்.இவையன்றி ஏராளமான சிரிய அளவில் தரைக்கோட்டைகளும் இருந்துள்ளன. அதியமான்கோட்டை மற்றும் தேன்கனிகோட்டை ஆகிய இரண்டு கோட்டைகளும் முற்றிலுமாக அழிந்து விட்டன.மிச்சமாகயிருப்பது தென்கரைகோட்டை மட்டுமே.சுமார் நாற்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த கோட்டையும் எந்தநிமிடமும் அழிந்துவிடும் நிலையில்தான உள்ளன.இக்கோட்டையின் அருகில் ஜலகண்டேஸ்வரர் ஆறு செல்கிறது.ஆற்றின் தென்கரையில் இக்கோட்டை அமைந்துள்ளதால் தென்கரைகோட்டை என்று பெயர் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இக்கோட்டையின் அகழி இருபது அடி அகலமும் நாற்பதடி உயரமும் இருந்திருக்கவேண்டும். இப்போது முழுவதுமாக தூர்ந்து போய் அகழிக்காண அடையாளம் மட்டுமேயிருக்கிறது. தென்கரைகோட்டை கி.பி.1652 ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்தான்களிடமிருந்து கண்டீரவ நரசராச உடையார் என்ற குறுநில அரசனால் கைப்பற்றப்பட்டது.அதன்பிறகு ஆங்கிலேயே அதிகாரியான கர்னல் உட் என்பவரால் கி.பி.1768 ஆம் ஆண்டு பிடிக்கப்பட்டது.அதே ஆண்டில் மீண்டும் இக்கோட்டை ஐதர் வசமும் பின்,திப்புசுல்தான்,மன்றோ,என மாறி மாறி இருந்திருக்கிறது.இத்தகவல்களை கி.பி.1916 ஆம் ஆண்டு வெளியான சேலம் மாவட்ட வரலாற்று பதிவில் உள்ளது. சீல நாயக்கன் ,சென்னப்ப நாயக்கன் என்ற இரண்டு சகோதரர் சேர்ந்து கட்டியதே, இக்கோட்டையாகும்.
இன்னும் பதிவு செய்யப்படாத எவ்வளவோ கோட்டைகள் உள்ளன. ஊடிதுர்கம், தேன்துர்கம், தாளவேந்திரம் கோட்டை,ஆனேகொள்ளு தரக்கோட்டை,குந்து கோட்டை,இப்படி நிறைய. மலைகள் நிறைந்தமாவட்டம் என்பதால் எல்லா  மலைமீதும் கோட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மிச்சமிருக்கின்றன.இக்கோட்டைகளை எல்லாம் இணைத்து சுற்றுலாதளமாக உருவாக்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாயும் கிடைக்கும். வரலாறும் அழியாமல் பாதுகாக்கப்படும்.
-அறம்கிருஷ்ணன்
தலைவர் அறம் வரலாற்று ஆய்வு மையம்.